
பனையூர் கிராமத்தில் கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமானை உயிருடன் மீட்டு சிகிச்சையளித்த கால்நடைமருத்துவர் மற்றும் வனத்துறை அதிகாரிகள்.
பனையூர் கிராமத்தில் கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமான் செவ்வாய்க்கிழமை மாலை உயிருடன் மீட்கப்பட்டு, உரிய சிகிச்சையளிக்கப்பட்டு அடர்வனப்பகுதியில் வனத்துறையினரால் கொண்டுவிடப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் பனையூர் கிராமத்தில் கண்மாயை அடுத்துள்ள கிணறு ஒன்றிற்கு அக்கிராமத்தினர் சிலர் செவ்வாய்க்கிழமை மாலை குளிப்பதற்காகச் சென்றனர்.
அப்போது அக்கிணற்று நீரினுள் புள்ளிமான் ஒன்று உயிருக்காகப் போராடிய வண்ணம் தத்தளித்துக்கொண்டிருந்தது. அதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக அப்புள்ளிமானை கிராமத்தினர் மீட்டு வத்திராயிருப்பு வனக்கோட்ட அதிகாரிகளுக்கு அலைபேசியில் தகவல் தந்தனர்.
தகவலின்படி நேரில் வந்த வனக்கோட்ட அலுவலர் கோவிந்தன்,வனக்காப்பாளர் ஜெயச்சந்திரன், வேட்டைத்தடுப்புக் காவலர் இராஜேந்திரபிரபு ஆகியோர் புள்ளிமானை மீட்டு திருச்சுழி கால்நடை மருத்துவர் மூலம் மானுக்கு உரிய சிகிச்சையளித்தனர்.
பின்னர் அந்த மானை வனத்துறை அதிகாரிகள், அடர்வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டு வந்தனர்.