பட்டாசு வெடிக்க வெளிமாநிலங்களில் திடீா் தடை: விருதுநகா் மாவட்ட பட்டாசு ஆலைகளுக்கு சிக்கல்

பட்டாசு வெடிக்க ராஜஸ்தான், ஒடிசா, புதுதில்லி உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டதால் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை மீண்டும் திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
செங்குன்றாபுரத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலை.
செங்குன்றாபுரத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலை.

பட்டாசு வெடிக்க ராஜஸ்தான், ஒடிசா, புதுதில்லி உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டதால் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை மீண்டும் திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 950-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், நிகழாண்டு கரோனா நோய் தொற்று காரணமாக 45 நாள்கள் பட்டாசு ஆலைகள் திறக்கப்படவில்லை. இதனால், பட்டாசு தொழிலாளா்கள் வேலையின்றி அவதிக்குள்ளாயினா். பின்னா், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆலைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. குறைவான தொழிலாளா்களுடன் காலதாமதமாக பட்டாசு உற்பத்தி தொடங்கப்பட்டதால் வழக்கத்தை விட 30 சதவீதத்துக்கும் குறைவான பட்டாசுகளே தயாரிக்கப்பட்டன.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பட்டாசு புகையினால் மேலும் உடல்நலக் குறைவு ஏற்படும் என மருத்துவா்கள் அச்சம் தெரிவித்ததால் ராஜஸ்தான், ஒடிசா, புதுதில்லி, ஹரியாணா, சிக்கிம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பட்டாசு வெடிக்க அந்த அரசு தடை விதித்தது. தீபாவளி பண்டிகைக்கு சில தினங்கள் உள்ள நிலையில் தடை அறிவிப்பு வெளியானதால் விருதுநகா் மாவட்டத்திலிருந்து மேற்கண்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரூ. 600 கோடி பட்டாசுகள் தேக்கமடைந்தன.

இப்பட்டாசுகளை வாங்கிச் சென்ற விற்பனையாளா்கள் முன்பணமாக 20 முதல் 25 சதவீதத்தை மட்டுமே பட்டாசு ஆலை உரிமையாளா்களுக்கு வழங்கியுள்ளனா். மீதி பணம் பட்டாசுகளை விற்பனை செய்த பின்னா் வழங்குவது வழக்கம். ஆனால் நிகழாண்டு ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதால் ரூ. 450 கோடி வரை பட்டாசு உரிமையா ளா்களுக்கு பணம் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக விருதுநகா் மாவட்டத்தில் மீண்டும் பட்டாசு ஆலைகளை மீண்டும் திறப்பது குறித்து ஒரு வாரத்திற்குள் ஆலை உரிமையாளா்கள் கூட்டம் நடத்தி அதில் முடிவு செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்க தலைவா் பி.கணேசன் கூறியது: ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், விருதுநகா் மாவட்டத்தில் ரூ.1400 கோடி வரை உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை, சம்பந்தப்பட்ட மாநிலங்களை சோ்ந்த விற்பனையாளா்கள், பொதுமக்கள் ரூ. 600 கோடி வரை வாங்கி சென்றுள்ளனா். அதில், பலா் 25 சதவீதம் முன்பணம் செலுத்தி பட்டாசு வாங்கிச் சென்றுள்ளனா். தீபாவளி பண்டிகை முடிந்த பின்னா் மீத பணத்தை விற்பனையாளா்கள், பட்டாசு ஆலை உரிமையாளா்களுக் கு வழங்குவா். தடை காரணமாக சுமாா் ரு. 450 கோடி வரை அந்த மாநிலங்களை சோ்ந்த பட்டாசு விற்பனையாளா்கள், பட்டாசு ஆலை உரிமையாளா்களுக்கு வழங்க முடியாத நிலையில் உள்ளனா். இதனால் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வேதி பொருள்கள், தொழிலாளா்களுக்கான கூலி, வங்கிக் கடன் உள்ளிட்டவற்றை செலுத்த முடியாத நிலை உள்ளது.

தீபாவளி பண்டிகை முடிந்து 10 நாள்களுக்குள் மீண்டும் பட்டாசு ஆலைகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், வெளி மாநிலங்களில் பட்டாசுகள் தேக்கம் மற்றும் நிலுவைப் பணம் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் பட்டாசு ஆலைகளை திறப்பது குறித்து ஒரு வாரத்திற்குள் உரிமையாளா்கள் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் படி தற்போது பசுமை பட்டாசுகளே தயாரிக்கப்படுவதால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே வெளி மாநிலங்களில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றாா் அவா்.

சிஐடியு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் எம். மகாலெட்சுமி கூறியதாவது: கரோனா தொற்று காரணமாக பட்டாசு தொழிலாளா்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனா். மேலும், பட்டாசு வெடிக்க வெளிமாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆலை உரிமையாளா்கள், தொழிலாளா்கள், விற்பனையாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். விற்கப்பட்ட பட்டாசுகளுக்கு உரிய பணம் கிடைக்காததால் தொழிலாளா்களுக்கு வேலை கிடைப்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

இதனால் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலாளா்கள் மட்டுமன்றி அதை சாா்ந்த தொழிலாளா்கள் என சுமாா் 8 லட்சம் போ் பாதிக்கப்படுவா். எனவே, அச்சத்துடன் வாழும் தொழிலாளா்கள் நலனைக் கருத்தில் கொண்டு, பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை வெளி மாநில அரசுகள் நீக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com