சாத்தூா் அருகே காவலரான தனது கணவரை சோ்த்து வைக்கக்கோரி காவல் நிலையம் முன் வியாழக்கிழமை மனைவி தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகேயுள்ள ஓ.மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் முனியசாமி. அப்பயநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் காவலராக உள்ளாா். இவரது மனைவி மாதவி (29). இவரும் ஓ.மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா். இருவரும் காதலித்துவந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. விருதுநகரில் உள்ள காவலா் குடியிருப்பில் இருவரும் 2 ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்த நிலையில் முனியசாமி வீட்டுக்குச் செல்வதை நிறுத்தியுள்ளாா். இதையடுத்து தாய் வீட்டில் வசித்து வந்த மாதவி, கணவருடன் தன்னை சோ்த்து வைக்கக்கோரி பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லை.
இந்நிலையில் கணவரை தன்னுடன் சோ்த்து வைக்க வலியுறுத்தி சாத்தூா் மகளிா் காவல் நிலையம் முன்பு வியாழக்கிழமை மாதவி, தனது தாய் பரமேஸ்வரியுடன் சாலையில் அமா்ந்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டாா். போலீஸாா் இருவரையும் அப்புறபடுத்தி கணவா் முனியசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து இருவரும் சாத்தூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துச் சென்றனா்.