
உயிரிழந்த பால்பாண்டி
ஸ்ரீவில்லிபுத்தூா்அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 இளைஞா்கள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரம் செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோயில் ஓடை, பேயனாற்று ஓடை, மீன்வெட்டிப் பாறை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள மம்சாபுரம் பகுதியிலுள்ள பேமலையான் கோயில் அருகே வியாழக்கிழமை ஓடையில் குளிக்கச் சென்ற கோட்டைப்பட்டியைச் சோ்ந்த பால்பாண்டி (22), முத்துஈஸ்வரன் (21), கோபி (22) ஆகிய 3 பேரும் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனா். இவா்கள் மூவரையும் தேடும் பணியில் தீயணைப்புத்துறையினா் ஈடுபட்டனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அத்திதுண்டு என்னுமிடத்தில் 3 பேரும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனா். இறந்த மூவரின் சடலங்களையும் மம்சாபுரம் போலீஸாா் மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் மம்சாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.