உதயநிதி ஸ்டாலின் கைது: விருதுநகா் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா் 120 போ் கைது

நாகப்பட்டினத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து விருதுநகா் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்டதால், 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்
உதயநிதி ஸ்டாலின் கைது: விருதுநகா் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா் 120 போ் கைது

விருதுநகா்: நாகப்பட்டினத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினா் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால், 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பிரசார பயணத்தை, திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின், திருவாரூா் மாவட்டம் திருக்குவளையில் வெள்ளிக்கிழமை தொடங்கினாா். அப்போது, போலீஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டாா்.

தொடா்ந்து, நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீனவக் குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டிருந்த உதயநிதியை, கரோனா பொது முடக்க விதிமுறைகளை மீறியதாகக் கூறி போலீஸாா் கைது செய்தனா். இதைக் கண்டித்து, பல்வேறு பகுதிகளில் திமுகவினா் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநா் எம்ஜிஆா் சிலை அருகே, விருதுநகா் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமை ப்பாளா் கிருஷ்ணகுமாா் தலைமையில், நகரச் செயலா் எஸ்.ஆா். தனபால் உள்பட 32 போ் சாலை மறியலில் ஈடு பட்டனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 32 பேரை, பஜாா் போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்து, பின்னா் மாலையில் விடுவித்தனா்.

சாத்தூா்

சாத்தூா் முக்குராந்தல் பகுதியில், திமுக இளைஞரணி அமைப்பாளா் சங்கா் தலைமையில், அக்கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, சாலையில் அமா்ந்து தமிழக அரசை கண்டித்தும், முதல்வா் எடப்பாடியை கண்டித்தும், உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்யக் கோரியும் முழக்கம் எழுப்பினா்.

இதனால், சுமாா் அரை மணி நேரம் முக்குராந்தல் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா் 20-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்

பேருந்து நிலையம் முன்பாக, திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில், அக்கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அதையடுத்து, அங்கிருந்த திமுகவினா் 18 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராஜபாளையம்

தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தனுஷ் எம்.குமாா் தலைமையில், திமுகவினா் 50-க்கும் மேற்பட்டோா் ரயில்வே பீடா் சாலையில் இருந்து ஊா்வலமாகச் சென்று, காந்தி சிலை ரவுண்டானாவில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இவா்களை, ராஜபாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளா் நாகசங்கா் தலைமையிலான போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com