முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ராஜபாளையம் கேபிள் டி.வி.யில் புதிய திரைப்படம்: விஜய் சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சி
By DIN | Published On : 04th October 2020 08:10 PM | Last Updated : 04th October 2020 08:29 PM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியார் கேபிள் டிவியில் ஓ.டி.டி யில் வெளியான புதிய திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. படக்குழுவினர் நேரில் வந்து, கேபிள் டிவி ஊழியர்கள் இருவரையும், கணிணிகள் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்து ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து, இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் க.பெ. ரணசிங்கம் என்ற திரைப்படம் கடந்த 2ஆம் தேதி ஓ.டி.டி. யில் வெளியானது. இந்த படத்தை சனிக்கிழமை ராஜபாளையம் தனியார் கேபிள் டி.வியில் முழுமையாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இதனையறிந்த விஜய் சேதுபதி ரசிகர்கள், சென்னையில் இருந்த இயக்குனர் விருமாண்டி மற்றும் கதாசிரியர் ஷண்முக முத்துசாமியிடம் தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ராஜபாளையத்திற்கு நேரடியாக வந்த படக்குழுவினர் ரசிகர்கள் உதவியுடன் கேபிள் டிவியின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று கம்ப்யூட்டர் மற்றும் செட் அப் பாக்ஸ் பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் பறிமுதல் செய்த உபகரணங்களுடன் கேபிள் டிவி ஊழியர்கள் மோகன், திருமுருக பிரவீன் இருவரையும் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கேபிள் டிவி நிர்வாகத்தின் மீது, விருதுநகர் மாவட்ட திருட்டு விசிடி குற்ற ஒழிப்பு துறையினரிடம் படக் குழுவினர் புகார் அளித்துள்ளனர்.