முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
அருப்புக்கோட்டை: உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 04th October 2020 04:39 PM | Last Updated : 04th October 2020 04:41 PM | அ+அ அ- |

அரசுமருத்துவமனை, அருப்புக்கோட்டை.
அருப்புக்கோட்டையில் அரசு மருத்துவமனை மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் அருகருகே அமைந்துள்ள இடத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்னர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை, நகர் காவல் நிலையம், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் ஆகிய முக்கிய அரசு அலுவலகங்கள் அருகருகே ஒரே இடத்தில் அமைந்துள்ளன. இந்நிலையில் வெளியூர்களிலிருந்து வந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கக்கூடிய உள்நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளோர்க்கு துணைக்கு வந்து தங்கும் உறவினர்களில் குறிப்பாகப் பெண்கள் தங்களுக்குத் தேவையான இரவு உணவு உள்ளிட்ட எந்தப்பொருள்களை வாங்க வேண்டுமென்றாலும் அரசு மருத்துவமனையை அடுத்துள்ள கடைகளுக்குச் செல்லவேண்டிய சூழலில் போதிய மின்விளக்குகள் இன்றி அந்த இடம் முழுக்கவே இருளடைந்துள்ளதால் அப்பெண்களுக்கு உரிய பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
மேலும் மாலை நேரத்திற்குமேல் இங்குள்ள பேருந்துநிறுத்தத்தில் காத்திருந்து பேருந்துகளைப் பிடிக்கவும் அவர்கள் அச்சப்படுகின்றனர். அதேபோல் காவல்நிலையத்திற்குப் பல்வேறு அலுவல்கள் தொடர்பாகவோ, புகார் அளிப்பதற்கோ வரும் பொதுமக்களும்கூட இரவில்வர தயக்கம் காட்டும் நிலை உள்ளது. இதனால் இந்த இடத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென பெண்கள், பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.