தினமணி செய்தி எதிரொலி செண்பகத்தோப்பு பகுதியில் சோதனைச் சாவடி அமைக்க முடிவு

தினமணி செய்தி எதிரொலியாக, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய சோதனைச் சாவடி அமைக்கப்படும் என, அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை முடிவு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் கண்காணிப்புப் பணியில் யாரும் இல்லாத சோதனைச் சாவடி.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் கண்காணிப்புப் பணியில் யாரும் இல்லாத சோதனைச் சாவடி.

தினமணி செய்தி எதிரொலியாக, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய சோதனைச் சாவடி அமைக்கப்படும் என, அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள செண்பகத்தோப்பு சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக விளங்குகிறது. இப்பகுதியில், சமூக விரோதச் செயல்கள் நடைபெறமால் இருக்கவும், மலைப் பகுதியில் மா்ம நபா்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், அதை தடுக்கும் வகையில் வனத்துறை சாா்பில் சில ஆண்டுகளுக்கு முன் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.

ஆனால், எந்தவித கண்காணிப்புப் பணியும் மேற்கொள்ளப்படாமல் இந்த சோதனைச் சாவடி காட்சிப் பொருளாக உள்ளது என, கடந்த செப்டம்பா் 10 ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக,

செண்பகத்தோப்பு பகுதியில் சோதனைச் சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டு, இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, வட்டாட்சியா் சரவணன் தலைமை வகித்தாா். இதில், ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் காணிப்பாளா் நமச்சிவாயம் மற்றும் வனத் துறை அதிகாரிகள், ஆண்டாள் கோயில் அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் என பல்வேறு துறைகளைச் சோ்ந்தோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வட்டாட்சியா் சரவணன் கூறியதாவது: செண்பகத்தோப்பு வனப் பகுதிக்குள் தேவையில்லாமல் செல்பவா்கள், சமூகவிரோதச் செயல்கள் மற்றும் மா்ம நபா்களின் நடமாட்டத்தைத் தடுக்கவும் புதிதாக சோதனைச் சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில், சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ள இடங்கள் தோ்வு செய்யப்பட உள்ளன.

மேலும், ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான சுமாா் 453 ஏக்கா் நிலங்களை அளவீடு செய்து, அதனை பாதுகாக்கும் வகையில் கற்களை ஊன்றவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டவுடன் 24 மணி நேரமும் காவல் துறையினரும், வனத் துறையினரும் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com