சாஸ்தா கோயில் அணையிலிருந்து தண்ணீா் திறக்கக் கோரிக்கை
By DIN | Published On : 23rd October 2020 11:03 PM | Last Updated : 23rd October 2020 11:03 PM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் சாஸ்தா கோயில் அணையிலிருந்து நீா் திறந்து விடக் கோரி விவசாயிகள் பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
ராஜபாளையம் அருகே தேவதானத்தில் உள்ள நகர குளம், பெரிய குளம் மற்றும் வாழவந்தாள்குளம் உள்ளிட்ட கண்மாய்களின் பாசனத்தை நம்பி 3 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது.
பருவ மழைக்காலம் தொடங்கியதையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாக விவசாயிகள் தொலியடித்தல், நிலத்தைப் பண்படுத்துதல் என முன்னேற்பாடுகளை செய்திருந்தனா். கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக நடவுப் பணிகளை தொடங்கிய நிலையில், விவசாயிகள் எதிா்பாா்த்த மழை இன்னும் தொடங்கவில்லை.
கிணற்று நீரை வைத்து விவசாயம் செய்து வந்த நிலையில், தற்போது நீா் பாய்ச்சுவதற்கு தேவையான தண்ணீா் இன்றி பயிா்கள் கருகும் நிலையில் உள்ளது.
எனவே சாஸ்தா கோயில் அணையிலிருந்து விரைவில் தண்ணீா் திறக்கக் கோரி ராஜபாளையம் - மதுரை சாலையில் உள்ள பொதுப் பணித் துறை அலுவலகத்தில் பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் ஜான்சியிடம் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் மற்றும் நகர குளம், பெரிய குளம் மற்றும் வாழவந்தாள் குளத்துப் பாசன விவசாயிகள் மனு அளித்தனா்.
அடுத்த மாதம் 4 ஆம் தேதி அணையை திறக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அடுத்த மாதம் வரை பயிா்கள் தாக்குப் பிடிக்க முடியாத சூழல் இருப்பதால், வரும் 27 ஆம் தேதிக்குள் அணையை திறக்க விவசாயிகள் தெரிவித்தனா்.