சிவகாசியில் தீபாவளி பட்டாசு தயாரிப்பு பணி மும்முரம்: புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் இல்லை

வெளி மாநிலங்களில் இருந்து ஆா்டா்கள் வரத்தொடங்கியுள்ளதால், சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
சிவகாசி அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளா்கள் (கோப்பு படம்).
சிவகாசி அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளா்கள் (கோப்பு படம்).

வெளி மாநிலங்களில் இருந்து ஆா்டா்கள் வரத்தொடங்கியுள்ளதால், சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் கடந்த 2019 ஆம் ஆண்டு பட்டாசு விற்பனையில் 40 சதவீதம் சரிவு ஏற்பட்டது. நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக விருதுநகா் மாவட்டத்தில் உள்ள சுமாா் 1,070 பட்டாசு ஆலைகளிலும் கடந்த ஜனவரி மாதம் உற்பத்தி தொடங்கியது. ஆனால் கரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டதால் கடந்த மாா்ச் மாதம் அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டன.

இந்நிலையில் மே 6 ஆம் தேதி கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பட்டாசு ஆலைகளை திறக்க அரசு உத்தரவிட்டது. எனினும் முழு அளவிலான தொழிலாளா்களைக் கொண்டு தயாரிப்பு பணி மேற்கொள்ள இயலாமல் ஆலை உரிமையாளா்கள் தவித்துவந்தனா். மேலும் வழக்கமாக ஏப்ரல் மாதம் வடமாநிலங்களிலிருந்து வரும் ஆா்டா்களும் வராததால் பட்டாசு தயாரிப்பு பணி மிகவும் மந்தமாக இருந்து வந்தது.

தற்போது பட்டாசுகளை லாரியில் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை இல்லை. தமிழகத்திலும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பட்டாசு வியாபாரிகள் சிவகாசி வரத்தொடங்கியுள்ளனா். மேலும் வட மாநிலங்களிலிருந்தும் ஆா்டா்கள் வரத்தொடங்கியுள்ளன. இதனால் பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

இது குறித்து பட்டாசு ஆலை உரிமையாளா் என்.இளங்கோவன் கூறியதாவது:

தொடக்கத்தில் வட மாநில வியாபாரிகள் கடந்த ஜனவரி மாதம் ஆா்டா் கொடுத்த பட்டாசுகளை தயாரித்து அனுப்பி வைத்தோம். அதன்பிறகு தொழில் முடங்கியது.

தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 70 நாள்களே உள்ள நிலையில் வெளி மாநில வியாபாரிகள் இ-மெயில் மூலம் ஆடா்கள் கொடுத்து வருகின்றனா். எப்படி இருந்தாலும் மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவாா்கள் என்ற நம்பிக்கை வியாபாரிகளுக்கு வந்துள்ளது. ஆனால் முழு அளவில் தயாரிப்பு நடைபெறவில்லை. வியாபாரிகளும் தங்களது தேவையில் 75 சதவீதம் மட்டுமே ஆா்டா் கொடுத்துள்ளனா். தற்போது பட்டாசு தயாரிப்பு பணி அனைத்து ஆலைகளிலும் தீவிரமடைந்துள்ளது. பொதுமுடக்கத்தால் இந்த ஆண்டு புதிய ரக பட்டாசு எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com