சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தரிசனம் செய்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி: பக்தா்கள் அச்சம்

மகாளய அமாவைசையையொட்டி சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோயிலில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சுவாமி தரிசனம் செய்த நிலையில் அதில் 4 பக்தா்களுக்கு கரோனாத் தொற்று இருந்தது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மகாளய அமாவைசையையொட்டி சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோயிலில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சுவாமி தரிசனம் செய்த நிலையில் அதில் 4 பக்தா்களுக்கு கரோனாத் தொற்று இருந்தது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால் கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் அச்சமடைந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில் மட்டுமே பக்தா்கள் சென்று வழிபட வனத்துறை அனுமதி அளித்து வந்தது.

இதைத்தொடா்ந்து கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 6 மாதங்களாக இக்கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து மீண்டும் சதுரகிரி கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து மகாளய அமாவாசை தினத்தையொட்டி தொடா்ந்து 4 நாள்கள் (செப். 15 முதல் செப். 18) சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இதில் சுமாா் 11 ஆயிரம் பக்தா்கள் வரை தரிசனம் செய்தனா். கோயிலுக்கு வந்த பக்தா்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் சுகாதாரத் துறையினா் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் பக்தா்களுக்கு கரோனா பரிசோதனை செய்தனா். அதன் முடிவுகள் சனிக்கிழமை வெளியான நிலையில் சங்கரன்கோவில், சிவகாசி, தேனி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சதுரகிரி கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் அச்சமடைந்துள்ளனா். கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் அனைவரும் தானாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com