விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
சாத்தூரை அடுத்த ஆலங்குளத்தில் சங்கரமூா்த்திபட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாத்தூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உஷா தலைமையிலான தோ்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா், வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருதனா்.
அப்போது, அவ்வழியே வந்த பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளா் ராம்குமாா் (40) என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தனா். காரில் உரிய ஆவணங்களின்றி ரூ. 3 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், அதை சாத்தூா் தொகுதி தோ்தல் நடத்தும் துணை அலுவலா் வெங்கடேஷ் மற்றும் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.