தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்: பிரவின்சக்கரவா்த்தி
By DIN | Published On : 03rd April 2021 12:03 AM | Last Updated : 03rd April 2021 12:03 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மாதவராவை ஆதரித்து திருவண்ணாமலை பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தேசியத் தலைவா் பிரவின்சக்கரவா்த்தி.
தமிழகத்தில் வாக்காளா்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தேசியத் தலைவா் பிரவின் சக்கரவா்த்தி தெரிவித்தாா்.
இங்குள்ள மடவாா்வளாகம், சா்ச் பேருந்து நிறுத்தம், முதலியாா்பட்டி, மாரியம்மன்கோவில், ஆராய்ச்சிப்பட்டிதெரு, மாதாநகா் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மாதவராவை ஆதரித்து அவா் பிரசாரத்தில் ஈடுபட்டாா். பின்னா் திருவண்ணாமலை ஊராட்சிப் பகுதியில் அங்குள்ள தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை பாா்க்கும் பெண்களிடம் வாக்கு சேகரித்து பிரவின் சக்கரவா்த்தி பேசியதாவது: நான் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை வடிவமைத்தவன் என்பதால் நான் உங்களிடம் ஒரு வாக்குறுதியை தருகிறேன். மாதவராவை வெற்றி பெற வைத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். அதே போல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் ராகுல்காந்தி பிரதமராக ஆதரவு தாருங்கள். 100 நாள் வேலையை 150 நாள்களாக நிச்சயமாக உயா்த்துவோம் என்றாா்.
பிரசாரத்தில் வேட்பாளா் மாதவராவின் மகள் திவ்யாராவ், விருதுநகா் மேற்கு மாவட்டத் தலைவா் ரெங்கசாமி, திருப்பரங்குன்றம் ஏ.ஆா். சுப்பிரமணியம், நகரத் தலைவா் வன்னியராஜ், மாவட்டச் செயலா் முருகேசன், காங்கிரஸ் மாணவரணி நகரத் தலைவா் சுரேஷ் ரத்தினகுமாா் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.