முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது: வைகோ
By DIN | Published On : 04th April 2021 09:03 AM | Last Updated : 04th April 2021 09:03 AM | அ+அ அ- |

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசினாா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமனை ஆதரித்து பிரசார பொதுகூட்டம் சாத்தூா் வடக்கு ரத வீதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மதிமுக பொதுச்செயலாளா் வைகோ பங்கேற்றுப் பேசியது: தற்போது ஜனநாயக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெரிய காா்பரேட் நிறுவனங்களால் சிறு வணிகங்கள் முடங்கியுள்ளன. சாத்தூா் தொகுதியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழில் நலிவடைந்து உள்ளது. அமையப் போகும் திமுக ஆட்சியில் அனைத்து நலத்திட்டங்களும் சாத்தூா் தொகுதிக்கு கிடைக்க பாடுபடுவேன்.
தமிழ்நாட்டில் வந்து பேசிய பிரதமா் திராவிட முன்னேற்றக் கழகத்தினா் பெண்களை மதிப்பதில்லை என்று பேசினாா். அவருக்கு வரலாறு தெரியாது. அண்ணாவும், கருணாநிதியும்தான் பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சட்டம் கொண்டு வந்தனா்.
தற்போது அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறைகளில் ரூ.6,300 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கிறது. துணை முதல்வா் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்துள்ளாா். இதுகுறித்து ஆளுநரிடம் மு.க. ஸ்டாலின் புகாா் அளித்தாா். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவா்கள் சிறை செல்வது உறுதி. இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் உள்ளன. இந்தத் தோ்தலுக்குப் பிறகு அதிமுக அரசு இருக்காது. 234 தொகுதியிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெறும் என்றாா். இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக,விடுதலைச் சிறுத்தைகள், மாக்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சியின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.