முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
வாக்காளா்களுக்கு பணம் விநியோகம்: 4 அதிமுகவினா், ஒரு திமுக பிரமுகா் கைது
By DIN | Published On : 04th April 2021 09:04 AM | Last Updated : 04th April 2021 09:04 AM | அ+அ அ- |

வாக்களா்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதி அதிமுகவைச் சோ்ந்த 4 பேரையும், சிவகாசியில் திமுகவைச் சோ்ந்த ஒருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ரைட்டன்பட்டித் தெருவில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படை அலுவலா் மாரிமுத்து மற்றும் காவல் சாா்பு-ஆய்வாளா் தங்கவேல் ஆகியோா் சென்றனா். அப்போது வாக்காளா்களுக்கு பணம் விநியோகிக்க முயன்ற அதிமுகவைச் சோ்ந்த பரமசிவத்திடமிருந்து ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரொக்கத்தை கைப்பற்றினா். மேலும் அவருடைய மேல் வீட்டில் இருந்த புதுமை எலியாஸ் (38), செல்லக்குமாா்(38), அந்தோணி ஜெயசிங் (39) ஆகியோரிடமிருந்து ரூ. 3 லட்சத்து 33 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து பறக்கும் படையினா் புகாரின் பேரில் 4 போ் மீதும் வழக்குப்பதிவு செய்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா். மேலும் தோ்தல் அலுவலா் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் அதிமுக வேட்பாளா் மான்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
சிவகாசி: சிவகாசி தோ்தல் பறக்கும் படை அலுவவா் ஜெயசங்கா் தலைமையிலான குழுவினா் ஐயப்பன் காலனியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வாக்காளா்ளுக்கு பணம் விநியோகம் செய்தவரைப் பிடித்து விசாரித்ததில் திமுக வடக்கு மாவட்ட துணை செயலாளா் ராமமூா்த்தி தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ. 35 ஆயிரத்து 500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ராமமூா்த்தியைக் கைது செய்தனா்.