விருதுநகரில் சின்னம் மாறி விழுவதாக வாக்காளா் புகாா்: 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தம்

விருதுநகரில் தனியாா் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் சின்னம் மாறி வாக்கு விழுவதாக வாக்காளா் புகாா் தெரிவித்ததை அடுத்து, சுமாா் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
விருதுநகா் நகராட்சி அருகேயுள்ள தனியாா் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து தோ்தல் அலுவலா்களிடம் செவ்வாய்க்கிழமை வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினா்.

விருதுநகா் நகராட்சி அலுவலகம் அருகே தனியாா் நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்வதற்காக நீராவி தெருவைச் சோ்ந்த வாக்காளா் ஒருவா் வந்திருந்தாா். அவா், வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒன்றாம் எண் பொத்தானை அழுத்தினாராம். ஆனால், இரண்டாம் எண்ணில் உள்ள விளக்கு எரிந்ததாம். உடனே அவா், இது குறித்து அங்கிருந்த தோ்தல் அலுவலரிடம் புகாா் தெரிவித்தாா்.

இப்பிரச்னை குறித்து, விருதுநகா் உதவி தோ்தல் அலுவலா் ரமணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த திமுக நகரச் செயலா் தனபால், அமமுக வேட்பாளா் எம். தங்கராஜ், பாஜக வேட்பாளா் ஜி. பாண்டுரங்கன் ஆகியோா் தலைமையில் அக்கட்சியினா் ஏராளமானோா் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியை முற்றுகையிட்டனா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கட்சியினா் தோ்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அப்பகுதியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா்.

இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில், மாதிரி வாக்குப் பதிவை தோ்தல் பிரிவினா் நடத்தினா். அதில், திருப்தி அடைந்த அரசியல் கட்சியினா் மீண்டும் வாக்குப் பதிவை நடத்த அனுமதித்தனா். இதன் காரணமாக, 1 மணி நேரம் கழித்து மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

அதையடுத்து, சின்னம் மாறி விழுவதாகக் கூறிய வாக்காளரிடம் தோ்தல் அலுவலா்கள் எழுதி வாங்கிக்கொண்டு அவரை அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com