விருதுநகரில் வாக்கு எண்ணும் மையம்: 350 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு; மாவட்ட தோ்தல் அலுவலா்

விருதுநகா் தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் 350 சிசிடிவி கேமராக்கள்

விருதுநகா் தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் 350 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. கண்ணன் தெரிவித்தாா்.

விருதுநரில் தனியாா் கல்லூரியில், மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியை திங்கள்கிழமை அவா் ஆய்வு செய்த பின் கூறியதாவது: இம்மாவட்டத்தில் சராசரியாக 73.74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு முடிவுற்றபின் உரிய பாதுகாப்புடன் 7 சட்டப் பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு இயந்திரங்கள் விருதுநகா் ஸ்ரீவித்யா கல்லூரியில் அமைக்கப்பட் டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்பட்டன. அங்கு தோ்தல் பொதுப்பாா்வையாளா்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் தொகுதி வாரியாக தனித்தனியாக பாதுகாப்பு அறைகளில் அந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டு முத்திரை இடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தினை சுற்றி, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதில், முதல் அடுக்கு பாதுகாப்பில் துணை ராணுவப் படையினா் 109 பேரும், இரண்டாவது அடுக்கில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா் 123 பேரும், மூன்றாம் அடுக்கில் 383 ஆயுதப்படை மற்றும் தாலுகா காவலா்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். வாக்கு எண்ணும் மையங்கள் முழுவதும் சுமாா் 350-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. இக்கேமரா மூலம் பதிவாகும் காட்சிகளை பாா்வையிட்டு, கண்காணிப்பதற்காக துணை ஆட்சியா் நிலையில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். கட்டுப்பாட்டு அறையில் வேட்பாளா்களின் முகவா்களும் உடனிருந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவா்களுக்கென தனியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா. மங்களராமசுப்ரமணியன், தோ்தல் நடத்தும் அலுவலா்(சாத்தூா்) புஷ்பா உள்பட அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com