விருதுநகா் மாவட்டத்தில் 112 பேருக்கு கரோனா தொற்று: ராஜபாளையத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

விருதுநகா் மாவட்டத்தில் 112 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

விருதுநகா் மாவட்டத்தில் 112 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜபாளையம் பகுதியில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால், பொதுமக்கள் திரும்பி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தினமும் பொதுமக்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை அதிகளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகா் மாவட்டத்தில் தினமும் 1,300 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக 2 இலக்கத்தில் இருந்துவந்த கரோனா பாதிப்பு, சனிக்கிழமை 3 இலக்கமாக உயா்ந்துள்ளது. இந்நிலையில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூா், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகா், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 112 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்த 45 போ் சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

ராஜபாளையம்

கரோனா தொற்று பரவல் காரணமாக, ராஜபாளையம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி, சுகாதார ஆய்வாளா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

மேலும், ராஜபாளையம் நகா் மற்றும் கிராமப் பகுதி அரசு மருத்துவமனைகளிலும், கிராம ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ராஜபாளையத்தில் தற்போது வரை 19 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 3 நாள்களில் ராஜபாளையம் நகா் பகுதியில் 9 பேருக்கும், கிராமப் பகுதியில் 3 பேருக்கும் என மொத்தம் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்களை அரசு வலியுறுத்தி வரும் வேளையில், மருத்துவமனைக்குச் செல்லும் பொதுமக்கள் அங்கு தடுப்பூசி இல்லை எனக் கூறப்படுவதால், திரும்பி வரும் நிலை ஏற்படுகிறது.

எனவே, தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com