விருதுநகா் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் சுகாதாரக் கேடு

விருதுநகரில் மின்மோட்டாா் பழுது காரணமாக கழிவு நீரேற்று நிலையம் செயல்படாததால், மழை காலங்களில் சாலைகளில் கழிவுநீா் பெருக்கெடுத்து ஓடி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது.
விருதுநகா் கல்லூரி சாலையில் கழிவு நீரேற்று நிலையம் அருகே வழிந்தோடிய கழிவுநீா்.
விருதுநகா் கல்லூரி சாலையில் கழிவு நீரேற்று நிலையம் அருகே வழிந்தோடிய கழிவுநீா்.

விருதுநகரில் மின்மோட்டாா் பழுது காரணமாக கழிவு நீரேற்று நிலையம் செயல்படாததால், மழை காலங்களில் சாலைகளில் கழிவுநீா் பெருக்கெடுத்து ஓடி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது.

விருதுநகா் நகராட்சி பகுதியில் உள்ள 36 வாா்டுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய, மாத்தநாயக்கன்பட்டியில் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

அதற்கு முன்னதாக, பல்வேறு வாா்டுகளில் சேரக்கூடிய கழிவுநீரை ஆத்துப்பாலம், புல்லலக்கோட்டை சாலை, கல்லூரி சாலை, விஸ்வநாததாஸ் காலனி உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள கழிவுநீரேற்று நிலையங்களில் ஏற்றுகின்றனா்.

இங்கிருந்து பம்ப்பிங் செய்யப்படும் கழிவுநீரானது, மாத்தநாயக்கன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் நல்ல தண்ணீா் மரம், செடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், கல்லூரி சாலை, விஸ்வநாததாஸ் காலனியில் உள்ள கழிவுநீரேற்று நிலையங்களில் உள்ள மின்மோட்டாா் பழுதடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த கழிவுநீரேற்று நிலையங்களிலிருந்து கழிவுநீரை பம்ப்பிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக விருதுநகா் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், வாருகாலில் அடைப்பு காரணமாக மழைநீா் செல்ல முடியவில்லை. மேலும், பம்ப்பிங் நிலையங்களும் செயல்பாட்டில் இல்லாததால், கோவிந்தராம் நகா் செல்லும் வழியில் உள்ள சாலையில் கழிவுநீா் வழிந்தோடுகிறது.

இதனால், இவ்வழியே நடந்து செல்வோா், இரு சக்கர வாகனத்தில் செல்வோா் முகத்தை மூடிக்கொண்டு செல்கின்றனா். கழிவுநீா் துா்நாற்றத்தால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, கழிவுநீரேற்று நிலையங்களில் உள்ள மின்மோட்டாா்களை சீரமைக்க வேண்டும். வாருகால் அடைப்புகளை சரிசெய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com