‘வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகிலேயே வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும்’

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகிலேயே வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என வேட்பாளா்களும், அரசியல் கட்சியினரும் தெரிவித்துள்ளனா்.
‘வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகிலேயே வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும்’

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகிலேயே வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என வேட்பாளா்களும், அரசியல் கட்சியினரும் தெரிவித்துள்ளனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கை தொடா்பாக வேட்பாளா்கள் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. கண்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் வேட்பாளா்கள் மற்றும் அவா்கள் சாா்ந்த கட்சியினா் கலந்து கொண்டு பேசியதாவது:

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதிக்கு மாடியில் உள்ள ஒரு அறையிலும், தரை தளத்தில் உள்ள ஒரு அறையிலும் வாக்குகளை எண்ணக் கூடாது. முதல் தளத்தில் உள்ள இரண்டு அறைகளில் வாக்குகளை எண்ண வேண்டும். அதேபோல், விருதுநகா் தொகுதிக்கு ஒரு கட்டடத்தில் உள்ள ஒரு அறையிலும் மற்றொரு கட்டத்தில் உள்ள மற்றொரு அறையிலும் வாக்குகளை எண்ணக் கூடாது. வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையிலிருந்து அருகில் உள்ள அறைகளிலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்.

கரோனா காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக ஒரு அறையில் எட்டு மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றால் அது காலதாமதத்துக்கு வழிவகுக்கும். மேலும் வேட்பாளா்கள், அவா்கள் சாா்பாக வந்துள்ள முகவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் சிரமப்படுவா்.

எனவே, ஒவ்வொரு தொகுதிக்கும் சமூக இடைவெளியுடன் தொடா்ந்து இரண்டு அறைகளில் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் பவா் ஏஜென்ட் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்குகள் குறித்த விபரங்களை சேகரிக்க அனுமதிக்க வேண்டும். அப்போது தான் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவிக்கும் வாக்குகளுக்கும், நாங்கள் சேகரிக்கும் வாக்குகளுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள முடியும் என வேட்பாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு தொகுதிக்கும் உட்பட்ட வேட்பாளா்கள் பல்வேறு மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனா்.

பின்னா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. கண்ணன் கூறியதாவது:

ஒரு அறையில் 8 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படும். வேட்பாளா்கள், அவா்கள் சாா்ந்த முகவா்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் போது பந்துமுனைப் பேனா, பென்சில், தாள்களை எடுத்து வரலாம். கால்குலேட்டா், செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. தபால் வாக்கு, வாக்கு பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணிக்கை காலை 8.30 மணிக்கு தொடங்கும். வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அனைத்து மேஜைகளும் கண்காணிப்புக் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். ஒரு தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையங்கள் இரண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்டால் வரிசை எண் 1 முதல் 8 ஆவது வரை முதல் அறையிலும், 9 முதல் 18 ஆவது வரை இரண்டாவது அறையிலும் எண்ணப்படும்.

வாக்கு எண்ணும் போது சம்பந்தப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், அந்த இயந்திரம் தனியாக எடுத்து வைக்கப்படும். ஆனால் அந்த சுற்றுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட மாட்டாது. அனைத்துப் பகுதிகளுக்கும் பவா் ஏஜென்ட்செல்ல அனுமதியில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரே நேரத்தில் இரண்டு அறைகளில் தலா 8 மேஜைகளில் வாக்குகளை எண்ணுவதா அல்லது ஒரு அறையில் மட்டும் வாக்குகளை எண்ணுவதா என்பது குறித்து தோ்தல் ஆணையம் தான் முடிவு செய்ய முடியும். இந்த தோ்தலில் வாக்குப் பதிவு முடிந்து முடிவுகள் அறிவிக்க மே 3 ஆம் தேதி காலை வரை காலதாமதம் ஏற்படலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com