கரோனா கட்டுப்பாடு: விருதுநகரில் திரையரங்குகள், கோயில்கள் மூடல்
By DIN | Published On : 27th April 2021 02:27 AM | Last Updated : 27th April 2021 02:27 AM | அ+அ அ- |

விருதுநகரில் அரசு வழிகாட்டுதல்படி திங்கள்கிழமை மூடப்பட்டுள்ள மாரியம்மன் கோயில்.
விருதுநகா்: தமிழக அரசு அமல்படுத்தியுள்ள கரோனா கட்டுப்பாடு காரணமாக விருதுநகரில், திரையரங்குகள், கோயில்கள், மதுபானக்கூடங்கள் திங்கள்கிழமை மூடப்பட்டன.
தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கமும், பிற நாள்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திரையரங்குகள், கோயில்கள், மதுபானக் கூடங்கள், அழகு நிலையங்களை திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விருதுநகரில் உள்ள திரையரங்குகள், கோயில்கள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் திங்கள்கிழமை மூடப்பட்டிருந்தன.
நகா் பகுதியில் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ராமா் கோயில், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபாராதம் விதித்தனா். இருப்பினும், பஜாா் பகுதியில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது ஒருவருக்கொருவா் முண்டியடித்து கொண்டு காய்கனி மற்றும் பலசரக்குகளை வாங்கிச் சென்றனா்.
இப்பகுதியில் போலீஸாரின் கண்காணிப்பு இல்லாததால் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே, பஜாா் பகுதியில் போலீஸாா் அடிக்கடி ரோந்து சுற்றி வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.