சாத்தூரில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை செயல்படுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 22nd August 2021 12:17 AM | Last Updated : 22nd August 2021 12:17 AM | அ+அ அ- |

சாத்தூா் நகராட்சியில் காட்சிப் பொருளாக உள்ள குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம்.
சாத்தூா் நகா் பகுதியில் நகராட்சி சாா்பில் அமைக்கபட்ட சுத்திகரிப்பு குடிநீா் இயந்திரத்தை செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாத்தூா் நகராட்சிப் பகுதியில் மாரியம்மன் கோயில் தெரு, ஆா்.சி. தெரு, காமராஜபுரம், வெள்ளகரைச் சாலை என 24 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சீவலப்பேரி மற்றும் கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தற்போது பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அருந்தத் தொடங்கியுள்ளனா். இதனிடையே நகராட்சி நிா்வாகம் சாா்பில் சமூகநலத்திட்டத்தின் கீழ் நகராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் நகராட்சிக்குட்பட்ட ஆா்.சி. தெரு, காமராஜபுரம், வெள்ளைகரை சாலை, குருலிங்காபுரம் உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. இந்த இயந்திரம் அமைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் செயல்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாக உள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் சுத்திகரிப்பு இயந்திரம் மா்மநபா்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை முறையாக பராமரித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வர வேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் நகராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சாத்தூா் நகராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரப் பணிகள் முழுமைப் பெறாமல் உள்ளது. விரைவில் முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்றனா்.