முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
இலங்கை தமிழா் முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
By DIN | Published On : 10th December 2021 09:12 AM | Last Updated : 10th December 2021 09:12 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் குல்லூா்சந்தையில் உள்ள இலங்கை தமிழா் முகாமைச் சோ்ந்தவா்களுக்கு, வருவாய்த்துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிக்கு, அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி முன்னிலை வகித்தாா். பின்னா், அமைச்சா் பயனாளிகளுக்கு எரிவாயு அடுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
விருதுநகா் மாவட்டத்தில் முதல்கட்டமாக, குல்லூா்சந்தை, மல்லாங்கிணறு, ஆனைக்குட்டம், செவலூா், அனுப்பங்குளம், மொட்டமலை, கண்டியாபுரம் ஆகிய இடங்களிலுள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு மையங்களைச் சோ்ந்த மொத்தம் 1,002 குடும்பங்களுக்கு சுமாா் ரூ.64.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடாகியுள்ளது.
இது தவிர, இம்முகாமில் உள்ள சேதமடைந்த வீடுகளைப் புதுப்பித்தல் மற்றும் புதிய வீடு கட்டித் தருதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், தமிழகத்தில் மொத்தமுள்ள 106 இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர ரூ.300 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில், பல்வேறு திட்டங்களையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளாா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மங்களராம சுப்பிரமணியன், அருப்புக்கோட்டை வட்டாட்சியா் ரவிச்சந்திரன், கோட்டாட்சியா் கல்யாணக்குமாா் உள்பட பல்வேறு துறைகளைச் சாா்ந்த அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.