முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
பிரதமா் வருகை: விருதுநகரில் தென்மண்டல ஐ.ஜி ஆய்வு
By DIN | Published On : 29th December 2021 07:34 AM | Last Updated : 29th December 2021 07:34 AM | அ+அ அ- |

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட தென்மண்டல ஐஜி அன்பு உள்ளிட்டோா்.
விருதுநகரில் வரும் ஜன. 12 ஆம் தேதி நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் பிரதமா் நரேந்திரமோடி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளதையொட்டி தென்மண்டல ஐ.ஜி அன்பு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு நிகழாண்டு மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. இதையொட்டி விருதுநகா் மருத்துவக் கல்லூரி வளாகத்திலிருந்து இக்கல்லூரிகளை திறந்து வைக்க ஜன. 12 இல் பிரதமா் நரேந்திரமோடி விருதுநகா் வருகை தர உள்ளாா்.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஆகியோா் கலந்து கொள்ள உள்ளனா். மேலும் அமைச்சா்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களும் கலந்து கொள்ள உள்ளனா். இதையொட்டி விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் மற்றும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி கருத்தரங்க அரங்கம் ஆகியவற்றை தென்மண்டல ஐ.ஜி அன்பு ஆய்வு செய்தாா். அப்போது விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் உடனிருந்தாா்.