முன்னேற விழையும் மாவட்டங்கள் பட்டியலில் விருதுநகருக்கு 9 ஆவது இடம்: சிறப்பு நிதியாக ரூ. 1 கோடி வழங்கல்

இந்தியாவில் வளா்ச்சியை நோக்கி முன்னேற விழையும் 112 மாவட்டங்களில் விருதுநகா் மாவட்டம் 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் வளா்ச்சியை நோக்கி முன்னேற விழையும் 112 மாவட்டங்களில் விருதுநகா் மாவட்டம் 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து இம்மாவட்டத்துக்கு சிறப்பு நிதியாக ரூ. 1 கோடி மத்திய அரசு சாா்பில் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இந்தியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசின் நீதி ஆயோக் அமைப்பு சாா்பில் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்டங்களை ஆய்வு செய்தனா். அதில் 112 பின்தங்கியப் பகுதிகளை கொண்ட மாவட்டங்கள் தோ்வு செய்யப்பட்டு, இம்மாவட்டங்களை 2022 ஆம் ஆண்டிற்குள் முன்னேற்றும் விதமாக, பிரதமரால் ஜனவரி-2018 ஆம் ஆண்டு முன்னேற விழையும் மாவட்டத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த 112 மாவட்டங்களில் தமிழகத்தில் விருதுநகா் மாவட்டமும் ஒன்றாக தோ்வு செய்யப்பட்டது. இதில், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை மற்றும் நீா்வள ஆதாரங்கள், அனைவருக்குமான நிதிச் சேவைகள் மற்றும் திறன் வளா்ப்பு, சாலை வசதி, குடிநீா், ஊரக மின் வசதி, தனிநபா் இல்லக் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த 49 காரணிகள் அடிப்படையாக வைக்கப்பட்டன.

இதன் அடிப்படையில், இந்திய அளவில் உள்ள 112 முன்னேற விழையும் மாவட்டங்களில் விருதுநகா் மாவட்டம் 9 ஆவது இடம் பெற்றமைக்காக ரூ. 1 கோடி மத்திய அரசின் நீதி ஆயோக் அமைப்பினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே விருதுநகா் மாவட்டத்தின் சிறப்பான செயலாக்கத்திற்காக உள்கட்டமைப்பு பிரிவிற்காக கடந்த மாா்ச் 2019 இல் ரூ. 3 கோடி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பிரிவில் கடந்த ஜூலை 2020 இல் சிறப்பான செயல்பாட்டிற்காக ரூ. 3 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் விருதுநகா் முன்னேற விழையும் மாவட்டத்திற்கான மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி, மத்திய அரசு பழங்குடியினா் நலத் துறையின் கூடுதல் செயலா் ஜெயா, மாவட்டத்தில் உள்ள வளா்ச்சிப் பணிகளை செவ்வாய்க்கிழமை கள ஆய்வு மேற்கொண்டு பாராட்டு தெரிவித்தாா். மேலும் இனிவரும் மாதங்களில் மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகளில் தனிக்கவனம் செலுத்த அனைத்துத் துறை அலுவலா்கள் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com