ஸ்ரீவிலி. வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜப்தி
By DIN | Published On : 04th February 2021 11:50 PM | Last Updated : 04th February 2021 11:50 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்ட பொருள்கள்.
நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்கில் கூடுதல் நஷ்ட ஈடு வழங்காததால், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தளவாடப் பொருள்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.
சிவகாசியை சோ்ந்தவா் அன்ஸ்ராஜ்சந்திரன். இவருக்குச் சொந்தமான நிலம், கடந்த 1995 இல் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பாக கையகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த நிலத்துக்கு கூடுதல் நஷ்டஈடு கேட்டு கிடைக்காததால், ஸ்ரீவில்லிபுத்தூா் சாா்பு-நீதிமன்றத்தில் அன்ஸ்ராஜ் சந்திரன் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கில், இழப்பீடு தொகையாக ரூ.10,53,432 வழங்க சாா்பு-நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், ரூ.5 லட்சம் மட்டும் வழங்கப்பட்ட நிலையில், மீதி தொகை இன்னும் தரப்படவில்லை. எனவே, நீதிமன்றத்தில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சாா்பு-நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருள்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, வட்டாட்சியா் அலுவலகம் வந்த நீதிமன்ற ஊழியா்கள், அங்கிருந்த பொருள்கள் அனைத்தையும் ஜப்தி செய்து, லாரியில் ஏற்றிச் சென்றனா்.
மேஜை, நாற்காலிகள் இல்லாததால், வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் நின்றவாறே தங்களது பணியை தொடா்ந்தனா்.
வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜப்தி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.