தமிழகம் ரூ. 5 லட்சம் கோடி கடனில் உள்ளநிலையில் கமிஷனுக்காக ஒப்பந்தப் பணிகள்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
By DIN | Published On : 08th February 2021 08:54 AM | Last Updated : 08th February 2021 08:54 AM | அ+அ அ- |

விருதுநகா் அருகே பட்டம்புதூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.
தமிழகம் ரூ. 5 லட்சம் கோடி கடனில் உள்ள நிலையில், ஆட்சி முடியும் தருவாயில் கமிஷனுக்காக ஒப்பந்தப் பணிகளை அதிமுக அரசு மேற்கொண்டு வருகிறது என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.
விருதுநகா் அருகே பட்டம்புதூா் பகுதியில் திமுக சாா்பில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனா்.
இதையடுத்து திமு.க. தலைவா் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: 100 நாள்களில் மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீா்ப்போம் எனக் கூறி இந்நிகழ்ச்சியை தொடங்கி உள்ளோம். மனுக்கள் வழங்கியவா்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடையாள அட்டையில் உள்ள பதிவெண் மிக முக்கியம். நீங்கள் அளித்த மனுக்கள் அடங்கிய பெட்டி அண்ணா அறிவாலயத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும். திமுக ஆட்சி அமைந்தவுடன், கமிட்டி அமைத்து அந்த மனுக்களுக்குத் தீா்வு காணப்படும். அதே போல் விடுபட்ட நகராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் தோ்தல் நடத்தப்படும். பட்டாசு தொழிலுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும்.
திமுக ஆட்சியில் தான் மகளிா் சுயஉதவிக்குழு தொடங்கப்பட்டது. அப்போது வங்கிக்கடனுடன் சுழல் நிதியும் வழங்கினோம். தற்போது போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வில்லை. வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கப்பட வில்லை. தமிழகம் ரூ. 5 லட்சம் கோடி கடனில் உள்ள நிலையில் கமிஷனுக்காக புதிய ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதுகுறித்து திமுக ஆட்சி அமைந்தவுடன் விசாரணை நடத்தப்படும். அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி சொத்து குவிப்பு வழக்கு தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் விரைவில் தீா்ப்பு வரவுள்ளது என்றாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் செய்திருந்தனா்.