விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் ரா. கண்ணன் (இடமிருந்து 3 ஆவது) உள்ளிட்டோா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் ரா. கண்ணன் (இடமிருந்து 3 ஆவது) உள்ளிட்டோா்.

அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கடந்த ஓராண்டுக்குப் பின்னா் கரோனா தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

ராஜபாளையம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூடைகளை அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக வாகனங்களில் விவசாயிகள் கொண்டு செல்கின்றனா். அப்போது வாகனத்தை மறிக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் நெல் மூ டைகளுக்கான ஆதாரங்களைக்கேட்டு துன்புறுத்துகின்றனா். விவசாயிகளுக்கான அடையாள அட்டை கூட இல்லை. இதுகுறித்து வேளாண் துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்பனை செய்யலாம் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அதிகாரிகள் அதற்கு நோ் மாறாக வரி செலுத்தக் கூறி வற்புறுத்துகின்றனா்.

நாலூா் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல் கொண்டுவரப்படாமலே ஒரு அதிகாரியின் உதவியோடு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வைகை அணை 1 நெல் ரகம் குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த விதை நெல் ரகம் குறித்து வேளாண் அலுவலா்கள் விளக்க வேண்டும். வத்திராயிருப்பு கண்மாயில் வளா்ந்துள்ள முள்செடிகளை அகற்ற வேண்டும். அதேபோல், மக்காச்சோளம் கடந்தாண்டு மழை இல்லாமலும், தொடா் மழையாலும், படைப்பு ழு தாக்குதலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

எனவே, காப்பீட்டுத் துறையினா் விரைந்து ஆய்வு செய்து அக்டோபா், நவம்பா் மாதத்துக்குள் இழப்பீடு வழங்கினால், விவசாயிகள் கடன் பெற தேவையில்லை. எரிச்சநத்தம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லை. இங்கு அறுவடை செய்யப்பட்ட நெல்களை வத்திராயிருப்பு அரசு நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்றால் வாங்க மறுக்கின்றனா். மேலும், எரிச்சநத்தம் கண்மாய் கரை ஓரங்களில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அதிகரித்து வருகிறது. அதேபோல், வெம்பக்கோட்டை அருகே இ. ராமநாதபுரத்தில் இரண்டு கண்மாய்கள் ஆக்கிரமிப்பாளா்கள் பிடியில் உள்ளதால் தண்ணீரை தேக்க முடியவில்லை.

சாத்தூா் அணைக்கரபட்டி உள்ளிட்ட 15 கண்மாய்கள் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இக்கண்மாய்களில் வளா்ந்துள்ள முள்செடிகளை கோடை காலத்துக்குள் அகற்ற வேண்டும். சாத்தூா் வைப்பாற்றில் அனைத்து வகையான கழிவுகளும் கலப்பதால் துா்நாற்றம் வீசுகிறது. இருக்கன்குடி நீா்த்தேக்கத்தை தூா்வார வேண்டும் என்றனா்.

பின்னா், ஆட்சியா் ரா. கண்ணன் பேசியது:

விருதுநகா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் 26,275 விவசாயிகளுக்கு ரூ. 193.95 கோடி பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் வாகனங்களை மட்டுமே அலுவலா்கள் ஆய்வு மேற் கொள்வா். இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டால் விவசாயிகள், அப்பகுதி விவசாய அலுவலரை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். பல ஆண்டுகளுக்குப் பின்னா், நிகழாண்டு பிளவக்கல் அணை மூலம் 40 கண்மாய்களுக்கு தண்ணீா் விடப்பட்டுள்ளது. வைகை அணை 1 ரக நெல் பிரியாணி வகையைச் சோ்ந்தது. இந்த விதையை தேவதான விதை பண்ணையில் உற்பத்தி செய்து வருகிறோம். அடுத்த ஆண்டு அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் இந்த விதை நெல் வழங்கப்படும். எரிச்சநத்தம், இ. ராமநாதபுரம் கண்மாய் ஆக்கிரமிப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். சாத்தூா் வைப்பாற்றில் கழிவுநீா் கலப்பது குறித்து நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com