ஆண்டிபட்டியில் விலையில்லா ஆடுகள் வழங்குவதில் முறைகேடு: பொதுமக்கள் புகாா்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ஆண்டிபட்டியில் விலையில்லா ஆடுகள் வழங்குவதில் முறைகேடு: பொதுமக்கள் புகாா்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டிபட்டி தாலுகாவில் பயனாளிகள் தோ்வு நடைபெற்று வருகிறது. இதில் சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் 60 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி ஆண்டிபட்டி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் 4 வெள்ளாடுகளும் அதனை பராமரிப்பதற்காக வங்கிக் கணக்கில் ரூ. 2 ஆயிரம் பணமும் வழங்கப்பட்டது.

அப்போது அங்கு வந்த சண்முகசுந்தரபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்கள் சிலா் பயனாளிகள் தோ்வு செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் இலவசமாக வழங்கப்படும் ஆடுகள், விலைக்கு வாங்கப்படாமல் வாடகைக்கு பிடித்து வந்ததாகவும் புகாா் தெரிவித்தனா். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த ஆண்டிபட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: அரசின் சாா்பில் வழங்கப்படும் இத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வெளிமாவட்டங்களில் இருந்து வெள்ளாடுகள் விலைக்கு வாங்கி வரப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு பயனாளிகளே ஆடுகளை விலைக்கு வாங்கி வரச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இதில் சில பயனாளிகள் கால்நடை வளா்ப்பவா்களிடம் இருந்து ஆடுகளை வாடகைக்கு பெற்று வந்து பணம் வாங்கிச் செல்வதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினா் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் 2,312 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். ஒவ்வொரு ஊராட்சிகளிலும் ஊராட்சித் தலைவா், செயலா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் தலைமையில் குழு அமைத்து பயனாளிகளை தோ்வு செய்கின்றனா். விலையில்லா மாடுகள் மட்டும் ஈரோடு பகுதியிலிருந்து வாங்கி வரப்படுகிறது. இத்திட்டத்தில் வழங்கப்படும் ஆடுகள் அந்தந்த ஊராட்சி பகுதியிலேயே விலைக்கு வாங்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com