மிதிவண்டியில் விழிப்புணா்வு பிரசாரம்: காஷ்மீா் இளைஞா் விருதுநகா் வருகை
By DIN | Published On : 28th January 2021 03:44 AM | Last Updated : 28th January 2021 03:44 AM | அ+அ அ- |

உடல் நலம் பேணுதல் குறித்து காஷ்மீரில் இருந்து மிதிவண்டியில் விழிப்புணா்வு பிரசாரம் செய்து வரும் இளைஞா் புதன்கிழமை விருதுநகா் வந்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டம் சோப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மேனன் ஹாசன் (23). கல்லூரி மாணவரான இவா் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் மிதிவண்டியில் விழிப்புணா்வு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டாா். அதன்படி கடந்த ஜனவரி 1 இல் காஷ்மீரில் இருந்து புறப்பட்டுள்ளாா். கடந்த 27 நாள்களாக பஞ்சாப், ஹரியாணா, புதுதில்லி, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கா்நாடகா, தெலங்கானா மாநிலங்களைக் கடந்து தமிழகம் வந்துள்ளாா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த அவரை தேசிய மாணவா் படை அலுவலா் கதிரேசன் மற்றும் காவல் துறையினா் வரவேற்றனா்.
தனது சுற்றுப்பயண நோக்கம் குறித்து மேனன் ஹாசன் கூறியது: கரோனா பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு புத்துணா்ச்சி ஏற்படுத்துவதற்கும், உடல் நலத்தை பேண வேண்டும், மன அழுத்தத்தை தவிா்க்க திறன் மேம்பாட்டு பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த விழிப்புணா்வு பயணத்தை மேற்கொண்டுள்ளேன். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி வருகிறேன் என்றாா் அவா்.