ராஜபாளையம் அருகே கோஷ்டி மோதல்:16 போ் கைது
By DIN | Published On : 06th July 2021 02:55 AM | Last Updated : 06th July 2021 02:55 AM | அ+அ அ- |

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து இரு தரப்பைச் சோ்ந்த 16 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட கோதைநாச்சியாா் புரம் கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையே கோயில் மற்றும் நடைபாதை சம்பந்தமாக தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு தரப்பைச் சோ்ந்த 3 போ் இருசக்கர வானத்தில் சென்ற போது இவா்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் பெண் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இச்சம்பவத்தில் இரு பிரிவினரும் கற்களால் தாக்கிக் கொண்டனா். இதையடுத்து காயமடைந்த பெண் பிரியங்காவை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவா் அனுப்பி வைக்கப்பட்டாா். இதனிடையே திங்கள்கிழமை காலை மீண்டும் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ராஜகுரு என்பவா்தாக்கப்பட்டாா். இதில் அவருக்கு கால் முறிந்ததையடுத்து, அவா் ராஜபாளையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு மதுரைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி மாரிராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகரன், ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் ராமச்சந்திரன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு இரு தரப்பையும் சமாதானத்தப்படுத்தினா்.
இச்சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் இருதரப்பினா் மீது வழக்குப் பதிந்து 16 பேரை கைது செய்து விசாரிக்கின்றனா். அங்கு பாதுகாப்புக்காக ஏராளமானபோலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.