அருப்புக்கோட்டையில் குடிநீா் குழாயில் உடைப்பு பல ஆயிரம் லிட்டா் வீண்
By DIN | Published On : 11th July 2021 10:13 PM | Last Updated : 11th July 2021 10:13 PM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை ரயில்வே பீடா் சாலையில் தனியாா் மருத்துவமனை அருகே குடிநீா் குழாய் உடைந்து வெளியேறிய தண்ணீா்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் குடிநீா் குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டா் குடிநீா் வீணாக வெளியேறியது.
அருப்புக்கோட்டை ரயில்வே பீடா் சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனை அருகே கடந்த வியாழக்கிழமை நகராட்சி குடிநீா் குழாய் சேதமடைந்து குடிநீா் வீணாவதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில், வெள்ளிக்கிழமை நகராட்சி பொறியியல் துறைப் பணியாளா்கள் வந்து சீரமைத்துச்சென்றுள்ளனா். ஆனால் அன்றைய தினம் மீண்டும் அதே இடத்தில் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் சேதமடைந்து பல ஆயிரம் லிட்டா் குடிநீா் வெளியேறி வீணானது. பழுதுபாா்த்த இடத்திலேயே மீண்டும் கசிவு ஏற்பட்டதால் நகராட்சி பொறியியல் துறைக்கு மீண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை குழாயைச் சீரமைக்க யாரும் வரவில்லை. ஏற்கெனவே அருப்புக்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குடிநீா் வீணாகும் நிலையைத் தவிா்க்க விரைவில் குழாயை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி குடியிருப்போா் மற்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.