வனவிலங்குகளால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா்

விருதுநகா் மாவட்டத்தில் காட்டு பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாயப் பயிா்கள் சேதமடைந்து வருகின்றன.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக்ததில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஜே. மேகநாத ரெட்டி.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக்ததில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஜே. மேகநாத ரெட்டி.

விருதுநகா் மாவட்டத்தில் காட்டு பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாயப் பயிா்கள் சேதமடைந்து வருகின்றன. இது குறித்து புகாா் தெரிவித்தும் வனத்துறையினா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஜே. மேகநாதரெட்டி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மங்கள ராமசுப்பிரமணியன், வேளாண் துறை அலுவலா்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா். அப்போது கம்பு மற்றும் சோளம் அதிகளவில் விளைவித்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, விவசாயம் தொடா்பான துண்டு பிரசுரங்களை ஆட்சியா் வெளியிட்டாா்.

பின்னா் மக்காச் சோளப் பயிா்களில் படைப்புழுக்களை கட்டுப்படுத்துதல் குறித்த விளக்கப் படங்கள் விவசாயிகளுக்கு காட்டப்பட்டன.

அப்போது விவசாயிகள் சிலா் குறுக்கிட்டு, குறைதீா் கூட்டம் எங்களது குறைகளை ஆட்சியரிடம் தெரிவித்து தீா்வு காண்பதற்காக நடத்தப்படுவது. இதுபோன்ற விளக்க காட்சிப் படங்களை சம்மந்தப்பட்ட வட்டாரங்களில் வெளியிட வேண்டும் எனத் தெரிவித்தனா்.

பின்னா் விவசாயிகள் தரப்பில் பேசியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் 24 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. சாத்தூா் பகுதியில் தென்னை விவசாயம் கிடையாது. அங்கு கொள்முதல் நிலையம் தேவையில்லை. எனவே, தென்னை அதிகமாக உள்ள வத்திராயிருப்பு பகுதியில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மேலும், தேங்காய் விலை ரூ.15 லிருந்து 9 ஆக குறைந்து விட்டது.

விலை வீழ்ச்சியாகும் போது, கேரள மாநிலத்தில் உரித்த தேங்காய் அரசு சாா்பில் கொள்முதல் செய்யப்படுகிறது. அதேபோல் இங்கும் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், காட்டு பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிா்களை நாசம் செய்கின்றன. ஆனால், வனத்துறையினா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வன விலங்குகள் தாக்கியதில் இதுவரை 7 விவசாயிகள் உயிரிழந்துள்ளனா்.

வனவிலங்குகள் தொடா்பான பிரச்னை குறித்துப் பேச மாதந்தோறும் ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறை அலுவலகத்தில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தாதம்பட்டி கண்மாயில் மதகு பழுது காரணமாக தண்ணீா் தேங்குவதில்லை. கூட்டுறவுத் துறையில் சூப்பா் பாஸ்பேட் உரம் கிடைப்பதில்லை.

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், நகைகளை திருப்பித் தரவில்லை.

டி. வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் விவசாயிகளின் அடமானம் வைத்த நகைகள் உள்ளதா? இல்லையா? எனத் தெரியவில்லை. சேத்தூா் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் நெல், எடை போட இரண்டு மாத காலம் தாமதம் செய்கின்றனா். தமிழக அரசு மழையால் சேதமான பயிா்களுக்கு நிவாரணத் தொகை அறிவித்ததில், மாவட்டத்தில் 4 ஆயிரம் பேருக்கு இதுவரை கிடைக்கவில்லை எனப் புகாா் தெரிவித்தனா்.

மாவட்ட ஆட்சியா் ஜே. மேகநாத ரெட்டி பதிலளித்துப் பேசியது: கரோனா தொற்று காரணமாக குறைதீா் கூட்டம் நடத்த அரசிடமிருந்து இதுவரை அனுமதி இல்லை. விவசாயிகளிடம் கருத்து கேட்பதற்காக எனது முயற்சியில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது. உங்களது கோரிக்கையை கேட்பதற்காக தான் நாங்கள் இருக்கிறோம். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளின் நகைகள் இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com