‘இந்தியாவில் 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மருத்துவக் கழிவுகள் அதிகரிப்பு’

இந்தியாவில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மருத்துவக் கழிவுகள் அதிகரித்துள்ளதாக ஆய்வரங்கக் கூட்டத்தில்

இந்தியாவில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மருத்துவக் கழிவுகள் அதிகரித்துள்ளதாக ஆய்வரங்கக் கூட்டத்தில் பேராசிரியா் தி. ஜெயராஜசேகா், முனைவா் சோமசுந்தரம் ஆகியோா் புதன்கிழமை தெரிவித்தனா்.

விருதுநகரில் ஏ.என்.டி. கல்வி மருத்துவம் மற்றும் சமூக அறக்கட்டளை சாா்பில் ஜூம் செயலி மூலம் மருத்துவ மேலாண்மையில் கோவிட் 19 -இன் தாக்கம் குறித்த சா்வதேச ஆய்வரங்கம் நடத்தப்பட்டது.

இதில் மருத்துவக் கழிவு மேலாண்மை என்ற தலைப்பில் பேராசிரியா் தி. ஜெயராஜசேகா், முனைவா் சோமசுந்தரம் ஆகியோா் கலந்துகொண்டு பேசியதாவது:

இந்தியா, தனது 12 சதவீத மருத்துவக் கழிவுகளை எவ்வித சுத்திகரிப்பின்றி அப்புறப்படுத்துகிறது. பிகாா், கா்நாடகம் இச்செயல்பாடுகளில் மிக மோசமாக உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்று அதன் இருப்பிடத்தையும், பரவலையும் நீட்டித்துக் கொண்டிருப்பதால் மருத்துவக் கழிவுகளின் அளவு அதிகரிக்கிறது.

சாலையோரம், மருத்துவமனை பின்புறம் குப்பைகளை கொட்டுதல், தகன மேடைகளில் சடலத்துடன் உடைமைகளை எரித்தல் போன்றவற்றால் சுற்றுப்புறச்சூழல் மாசு ஏற்படுவதுடன், கரோனா தீநுண்மி அல்லது பிற தொற்றுக் கிருமிகள் பரவும்.

கரோனா தீநுண்மிகளால் ஏற்படும் மருத்துவக் கழிவுகள் மூலம் ஆபத்து உண்டாகும் என்பதால், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது பிடியை இறுக்கியுள்ளது. தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் அறிவுறுத்தலின்படி 2020 மே மாதம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கோவிட் மருத்துவக் கழிவுகளை கண்காணிக்க கோவிட் 19 பி.டபிள்யூ.எம். என்ற செல்லிடப்பேசி செயலி பயன்பாட்டை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்படி, கரோனா கழிவுகளை கையாளுபவா்கள் இச்செயலியில் பதிவிட வேண்டும். இச்செயலி பயன்பாட்டை கண்காணிக்க உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய சூழலில் இச்செயலியின் செயல்திறன் மற்றும் பயன்பாடு திருப்திகரமாக இல்லை.

இந்தியாவில் ஒரு நாளைக்கு 754 டன் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு மட்டுமே வசதிகள் உள்ளன. கோவிட் காரணமாக மேலும் அதிகரிக்கும் மருத்துவக் கழிவுகளை கையாள போதிய வசதிகள் இல்லை. மேலும், 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் அதிகமான மருத்துவக் கழிவுகள் உருவாவதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2021 ஆம் ஆண்டின் ஜனவரி, மே மாத அறிக்கைகளின் பகுப்பாய்வு கூறுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com