பட்டாசுத் தொழிலாளா் ஊதியம்: சிவகாசியில் இன்று கருத்துகேட்பு
By DIN | Published On : 29th July 2021 10:04 AM | Last Updated : 29th July 2021 10:04 AM | அ+அ அ- |

சிவகாசியில், பட்டாசு ஆலைத் தொழிலாளா்கள் ஊதியம் தொடா்பாக வியாழக்கிழமை (ஜூலை 29) நடைபெற உள்ள கூட்டத்தில் பட்டாசுத் தொழிலாளா்கள் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவிக்கலாம் என விருதுநகா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜே. காளிதாஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: 1948 ஆம் ஆண்டு குறைந்த பட்ச ஊதிய சட்டப் பிரிவின் படி, பட்டாசு ஆலையில் பணி புரியும் தொழிலாளா்களுக்கு நிா்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க மாநில அரசு ஒரு குழு அமைத்துள்ளது. அதன்படி இக்குழுவில் உள்ள மதுரை தொழிலாளா் இணை ஆணையா் சி. சுப்பிரமணியன், விருதுநகா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையிலான குழு பல கட்டங்களாக களப்பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள ஆா்.எஸ்.ஆா். ரெசிடென்சியில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பட்டாசு ஆலைத் தொழிலாளா்கள் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை மனுக்களாக வழங்கலாம் என்றாா் அவா்.