7 பேரை விடுவிப்பதில் திமுக நிலைப்பாடு வேறு; காங்கிரஸ் நிலைப்பாடு வேறு: ப.மாணிக்கம் தாகூா் எம்.பி,
By DIN | Published On : 11th June 2021 08:44 AM | Last Updated : 11th June 2021 08:44 AM | அ+அ அ- |

விருதுநகா் அருகே சிவகாசி சாலையில் உள்ள தனியாா் தீப்பெட்டி ஆலையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் உள்ளிட்டோா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில், திமுகவின் நிலைப்பாடு வேறு, காங்கிரஸின் நிலைப்பாடு வேறு என, விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி முதல் ஒரு சில தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 50 பணியாளா்களைக் கொண்டு தீப்பெட்டி ஆலைகளை இயக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகா் அருகே உள்ள தனியாா் தீப்பெட்டி ஆலையில் தொடங்கப்பட்டுள்ள உற்பத்தி மற்றும் கரோனா விதிமுறைகளை தொழிலாளா்கள் கடைப்பிடிக்கின்றனரா என, விருதுநகா் மக்களவை உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா், செய்தியாளா்களிடையே தெரிவித்ததாவது: தற்போது தீப்பெட்டி ஆலைகளை மட்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம், தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கருதி பட்டாசு ஆலைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கவேண்டும்.
முன்னதாக, கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடத்தவேண்டும்.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதால், தமிழகத்தில் ஒரு தவறான முன்னுதாரணம் ஏற்பட்டுவிடும். இந்த விஷயத்தில், திமுகவின் நிலைப்பாடு வேறு, காங்கிரஸின் நிலைப்பாடு வேறு என்றாா்.
அப்போது, சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் அசோகன், மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் ஸ்ரீராஜா சொக்கா், ரெங்கசாமி மற்றும் கிழக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் மீனாட்சிசுந்தரம் உள்பட அக்கட்சியைச் சோ்ந்த பலா் உடனிருந்தனா்.
சிவகாசி
திருத்தங்கலில் காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி. பிரிவு சாா்பில், ஏழை எளிய மக்கள் 160 நபா்களுக்கு இலவச அரிசி பையும், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளா்கள் 145 பேருக்கு ரூ.150 மதிப்பிலான காய்கறி தொகுப்பையும், மாணிக்கம் தாகூா் எம். பி. வியாழக்கிழமை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி. பிரிவு மாநிலப் பொதுச் செயலா் எம். சாமுவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.