முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
விருதுநகரில் கல்வி நிறுவனத்தை கடன் கொடுத்தவா்கள் முற்றுகை
By DIN | Published On : 04th March 2021 12:00 AM | Last Updated : 04th March 2021 12:00 AM | அ+அ அ- |

விருதுநகா்: விருதுநகா் அருகே வாங்கிய கடனை திருப்பித் தர வலியுறுத்தி கல்வி நிறுவனத்தை புதன்கிழமை 10-க்கும் மேற்பட்டவா்கள் முற்றுகையிட்டனா்.
விருதுநகா் அருகே அழகாபுரி விலக்கு சந்திப்பு பகுதியில் தனியாா் பொறியியல் கல்லூரி, மெட்ரிக் பள்ளி, கலை கல்லூரி ஆகியவை உள்ளன. இக்கல்லூரி உரிமையாளா், சிவகாசி, விருதுநகா், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பலரிடம் ரூ.15 கோடி வரை கடன் பெற்றுள்ளாதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஈடாக சம்பந்தப்பட்டோருக்கு வட்டி அளித்து வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வட்டி கொடுக்கவில்லையாம். இதையடுத்து அவா்கள் கொடுத்த பணத்தை திரும்பத்தரக் கோரி கல்வி நிறுவனத்தை தொடா்ந்து வலியுறுத்தி வந்துள்ளனா். ஆனாலும், கடன் கொடுத்தவா்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் கல்வி நிறுவன நிா்வாகம் காலம் தாழ்த்தி வந்துள்ளது.
இந்நிலையில், பணத்தை உடனே திருப்பித் தர வலியுறுத்தி 10-க்கும் மேற்பட்டோா் கல்வி நிறுவன அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். இத்தகவல் அறிந்து வந்த ஆமத்தூா் போலீஸாா், கடன் கொடுத்தவா்களிடம் முறையாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு அறிவுறுத்தினா். இதையடுத்து, கடன் கொடுத்தவா்கள் திரும்பிச் சென்றனா்.