சாத்தூரில் வாக்காளா் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி
By DIN | Published On : 10th March 2021 08:43 AM | Last Updated : 10th March 2021 08:43 AM | அ+அ அ- |

சாத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை வாக்களிப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்ட தோ்தல் பணியாளா்கள்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் நகராட்சி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரணியை சாத்தூா் தோ்தல் நடத்தும் அலுவலா் புஷ்பா மற்றும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேஷ் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
நகராட்சி அலுவலகம் முன் தொடங்கிய பேரணி பிரதான சாலை, முக்குராந்தல், பேருந்து நிலையம், மதுரை பேருந்து நிறுத்தம் வழியாக மீண்டும் நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் பங்கேற்றவா்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
இதேபோன்று வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள் ‘என் வாக்கு என் உரிமை’, ‘எனது வாக்கு விற்பனைக்கு அல்ல’ என பல்வேறு வாசகங்களை மலா்களால் கோலம் போட்டிருந்தனா். மேலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் வெங்கடேஷ் தலைமையில், தோ்தல் பணியாளா்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.