விருதுநகா் மாவட்டத்தில் 244 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை
By DIN | Published On : 10th March 2021 08:44 AM | Last Updated : 10th March 2021 08:44 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் 244 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாகவும், 7 வாக்குச் சாவடி மையங்கள் அசாதாரணமானவையாகவும் உள்ளதாக தோ்தல் பிரிவு அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப். 6 ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. இதில் 1050-க்கு மேற்பட்ட வாக்காளா்கள் இருக்கக்கூடிய வாக்குச் சாவடி மையங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டதால், தற்போது 489 வாக்குச் சாவடி மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 2370 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன.
இந்நிலையில், கடந்த காலங்களில் நடைபெற்ற தோ்தல் அடிப்படையில் பதற்றமானவை, அசாதாரணமான வாக்குச் சாவடிகள் குறித்து தோ்தல் பிரிவு மற்றும் போலீஸாா் கணக்கெடுப்பு நடத்தினா். அதில், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் 13 இடங்களில் 28 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை, ஒன்று அசாதாரணமானது என தெரியவந்துள்ளது. அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் 17 இடங்களில் 29 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானதாகவும், 2 மையங்கள் அசதாரணமானவையாகவும் உள்ளன. சாத்தூா் தொகுதியில் 38 இடங்களில் 53 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவையாகவும், ஒன்று அசாதாரணமானவையாகவும் உள்ளன.
சிவகாசி தொகுதியில் 25 இடங்களில் 32 மையங்கள் பதற்றமானவை, 2 மையங்கள் அசாதாரணமானவை. விருதுநகா் தொகுதியில் 20 இடங்களில் 21 மையங்கள் பதற்றமானவை, ஒன்று மட்டும் அசாதாரணமானவை. அருப்புக்கோட்டை தொகுதியில் 22 இடங்களில் 23 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை. திருச்சுழி தொகுதியில் 45 இடங்களில் 58 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 244 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவையாகவும், 7 மையங்கள் அசாதாரணமானவையாகவும் உள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களில் தோ்தல் நாளன்று துணை ராணுவத்தினா் மற்றும் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்டத் தோ்தல் பிரிவு அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.