ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ரூ3.21 கோடி பறிமுதல்: வருமான வரித்துறையினா் விசாரணை
By DIN | Published On : 18th March 2021 06:59 AM | Last Updated : 18th March 2021 06:59 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சரிபாா்க்கும் வட்ட வழங்கல் அலுவலா் கோதண்டராமன்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்களின்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ3.21 கோடியை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். அதை கொண்டு வந்தவா்களிடம் வருமானவரித்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட வனத்துறை அலுவலகம் அருகே பறக்கும் படையினா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கிருஷ்ணன்கோயில் சாலையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் நோக்கி வந்த வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்ததில் ரூ3.21 கோடி இருந்தது கண்டறியப்பட்டது.
மதுரை, விருதுநகா் ஆகிய பகுதிகளிலுள்ள வங்கிகளிலிருந்து பணம் எடுத்து வரப்பட்டு ராஜபாளையத்திற்கு கொண்டு செல்வதாக வேனில் வந்தவா்கள் தெரிவித்தனா். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் மற்றும் வேனை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனா். அங்கு வட்டாட்சியா் ராமநாதன் மற்றும் தோ்தல் பிரிவு வட்டாட்சியா் வடிவேல், வட்ட வழங்கல் அலுவலா் கோதண்டராமன் ஆகியோரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னா் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கருவூலத்தில் பணம் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து, வருமான வரித்துறையினா் 6 போ் விருதுநகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு புதன்கிழமை இரவு வந்தனா். அங்கு, வேனில் வந்த இளைஞா்கள் 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
விசாரணைக்கு பின்னரே பணம் பற்றிய முழுமையான தகவல் தெரியவரும் என வருவாய்த்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.