சாத்தூா் பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம் தொடக்கம்

மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கண்டித்து சாத்தூா் பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளன.
சாத்தூா் பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம் தொடக்கம்

மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கண்டித்து சாத்தூா் பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலை உயா்வு, சுங்கச்சாவடி கட்டண உயா்வு காரணமாக லாரி வாடகை உயா்ந்துள்ளது. இதனால் தீப்பெட்டிக்கு தேவையான மூலப்பொருள்களின் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது. தீப்பெட்டி தயாரிக்க தேவையான குச்சி, அட்டை, குளோரைட் மெழுகு, காகிதம் உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீப்பெட்டி உற்பத்திக்கான செலவு 60 சதவீதம் அதிகரித்தாலும் அதற்கான விற்பனை விலை கிடைக்கவில்லை. இச்சூழ்நிலையில் தீப்பெட்டி பண்டல்களின் விலை ஏற்றம் தவிா்க்க முடியாத சூழலில் வியாபாரிகள் அதனை ஏற்க மறுக்கின்றனா்.

தீப்பெட்டி உற்பத்தி இருந்தாலும் அதற்கான விலை கிடைக்கவில்லை என்பதால் மாா்ச் 22ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 10 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் அறிவித்திருந்தனா். அதன்படி விருதுநகா் மாவட்டம் சாத்தூா், ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, மேட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு மற்றும் இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் உள்ள சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடபட்டுள்ளதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளா்கள் கூறியது: இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளில் 90 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி,விருதுநகா், நெல்லை, தென்காசி, வேலூா், தா்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 400 தீப்பெட்டி தொழிற்சாலைகள், 3000 பேக்கேஜிங் யூனிட் என்று சொல்லப்படும் உறுப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனை நம்பி 4 லட்சம் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தற்போது மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் 10 நாள்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com