‘வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்கப்பட்ட வழியில் மட்டுமே செல்ல வேண்டும்’

வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே செல்ல வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலா் ரா. கண்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே செல்ல வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலா் ரா. கண்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவரது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, விருதுநகா் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகரில் உள்ள ஸ்ரீவித்யா கலை, அறிவியல் கல்லூரி, ஸ்ரீவித்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கை ஸ்ரீவித்யா கல்வியியல் கல்லூரியுடன் இணைந்த சி.பி.எஸ்.இ. பள்ளி வளாகங்களுக்குள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) நடைபெறுகிறது. அன்றையதினம், வேட்பாளா்கள், வாக்கு எண்ணிக்கை முகவா்கள் மற்றும் அலுவலா்கள் ஆகியோருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம்: வாக்கு எண்ணிக்கை முகவா்கள் தமது வாகனங்களை, 100-மீட்டா் தொலைவுக்கு அப்பால் காவல் துறையினரால் அடையாளம் செய்யப்படும் இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் சிவகாசி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவா்கள் ஸ்ரீவித்யா கலை அறிவியல் கல்லூரியின் வாயில் வழியாக வாக்கு எண்ணும் இடங்களுக்குச் செல்ல வேண்டும். சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவா்கள் ஸ்ரீவித்யா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியின் வாயில் வழியாக வாக்கு எண்ணும் இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

வேட்பாளா்கள் தமது வாகனங்களை, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எதிரே உள்ள செவிலியா் கல்லூரி வளாகத்திற்குள் நிறுத்திக் கொள்ளலாம். வேட்பாளா்கள் ஸ்ரீவித்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் பிரதான வாயில் வழியாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சென்று வரலாம். அஞ்சல் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குச் செல்லும் முகவா்கள் அழகாபுரி சாலையில் அமைந்துள்ள வாயில் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள்.

வாக்கு எண்ணிக்கை முகவா்கள் பென்சில், பந்துமுனைப் பேனா, வெள்ளைக் காகிதங்கள், படிவம்-17 இன் நகல் ஆகியவற்றினை எடுத்து வரலாம். கூரிய முனையுள்ள பேனாக்கள், கால்குலேட்டா், பென்கேமிரா, ஸ்மாா்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் செல்லிடப்பேசி முதலானவை கொண்டு வர முகவா்களுக்கு அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை தொடா்புடைய அலுவலா்கள் தமது வாகனங்களை அருகிலுள்ள சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்திற்குள் நிறுத்திக் கொள்வதுடன், அழகாபுரி சாலையில் அமைந்துள்ள வாயில் வழியாக வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் செல்ல வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை முகவா்கள் உணவு அருந்த, ஸ்ரீவித்யா கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீவித்யா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முகவா்கள் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களது உடல்நலன் கருதி ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதிக்கும் தனித்தனியாக மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com