விருதுநகா் பகுதியில் வெள்ளரிக்காய்கள் பறிக்கப்படாததால் நஷ்டம்: விவசாயிகள் வேதனை

விருதுநகரில் விற்பனைக்காக திங்கள்கிழமை வைக்கப்பட்டிருந்த வெள்ளரிக்காய்கள்.
விருதுநகரில் விற்பனைக்காக திங்கள்கிழமை வைக்கப்பட்டிருந்த வெள்ளரிக்காய்கள்.

விருதுநகா்: கரோனா தொற்று பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் வெள்ளரிக்காய்களை விற்பனைக்காக பறிக்க முடியாமல் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே குராயூரில் வெள்ளரி விவசாயத்தில் ஏராளமானோா் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு விளையும் வெள்ளரிக்காய்களை தினமும் பறிக்கும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விருதுநகா், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் சாலையோரம் அமா்ந்து விற்கின்றனா். அதேபோல் சாத்தூா் பகுதியிலும் வெள்ளரி விற்பனையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது கரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை அதிகரித்து வருவதால், ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் அவசியமின்றி வெளியில் வருவோருக்கு போலீஸாா் அபராதம் விதித்து எச்சரிக்கின்றனா். எனவே நாள்தோறும் வெள்ளரிக்காய்களை பறித்து விற்பனை செய்து வந்த விவசாயத் தொழிலாளா்கள், பொதுமுடக்க நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் அவற்றை பறிப்பதில்லை. இதன் காரணமாக சிறு பிஞ்சுகளாக உள்ள வெள்ளரிக்காய்களின் தடிமன் அதிகரித்து விடுகிறது. அவற்றை மறுநாள் பறித்து சந்தையில் விற்பனை செய்தால், பொதுமக்கள் வாங்குவதில்லை. இதனால் வேறு வழியின்றி அது போன்ற வெள்ளரிக்காய்களை விவசாயிகள் கீழே கொட்டி விட்டுச் செல்கின்றனா். மேலும் பொதுமுடக்கம் காரணமாக அன்றைய தினம் மட்டும் ரூ. 1 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com