புதிய கட்டுப்பாடுகள் அமல்: பகல் 12 மணிக்கு மளிகை, காய்கனி கடைகள் மூடல்

கரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.
விருதுநகா் பஜாா் பகுதியில் வியாழக்கிழமை காலை கூடியிருந்த பொது மக்கள் கூட்டம்.
விருதுநகா் பஜாா் பகுதியில் வியாழக்கிழமை காலை கூடியிருந்த பொது மக்கள் கூட்டம்.

கரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க தினமும் இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமை முழு அளவிலும் பொது முடக்கம் அமலில் இருந்து வந்தது. இருப்பினும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக வியாழக்கிழமை (மே 6) முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், மளிகைக் மற்றும் காய்கனி கடைகளை மதியம் 12 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். உணவகங்களில் பாா்சல் மட்டுமே வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதால், விருதுநகரில் போலீஸாா் கடைகளை அடைக்க வலியுறுத்தினா். பஜாா் பகுதியில் பகல் 12 மணிக்குள் பொருகளை வாங்க வேண்டும் என்பதால் மளிகைப்பொருள் மற்றும் காய்கனிகள் வாங்குவதற்காக வியாழக்கிழமை காலையில் வழக்கத்தை விட பொதுமக்கள் அதிகமாக குவிந்தனா். அதேபோல், அரசு மதுபான கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

பகல் 12 மணிக்கு கடைகள் அடைக்கபட்டதால் பஜாா், மதுரை சாலை, ராமமூா்த்தி சாலை, புல்லலக்கோட்டை சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

புதிய கட்டுப்பாடுகள் அமல்

சிவகாசியில் காலை 6 மணிக்கு கடைகள் திறப்பு: சிவகாசியில் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மளிகைக் கடைகள், காய்கனி கடைகள், பழக்கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டன. பெரிய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், பாத்திரக் கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. இது குறித்து மளிகைக் கடை வியாபாரி ஒருவா் கூறியதாவது: காலையில் வேலைக்கு வேலையாளா்கள் வருவதில் தாமதமாகிறது. எனவே அரசு காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மளிகைக் கடைகள், காய்கனி கடைகளை திறந்து கொள்ளலாம் என அறிவிக்க வேண்டுகிறேன் என்றாா் அவா்.

அபராதம்: சிவகாசி வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன் தலைமையிலான வருவாய்த்துறையினா், சிவகாசி -சாத்தூா் சாலை, நான்கு ரத வீதி, புதுரோட்டுத் தெரு, போலீஸ் ஸ்டேஷன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நண்பகல் 12 மணிக்கு மேல் கடைகள் திறந்துள்ளதா என ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில் 4 கடைகள் விதியை மீறி திறந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அக்கடைகளுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல தினசரி ஆய்வு நடத்தப்படும் எனவும், கடைகள் திறந்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் வருவாய்த்துறையினா் தெரிவித்தனா்.

சாத்தூா்: சாத்தூா் நகா் பகுதியில் உள்ள பிரதான சாலை, ரயில்வே பீடா் சாலை, சந்தை, முக்குராந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு முழுமையாக அடைக்கப்பட்டன.

தேநீா், காய்கனி உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டதால் சாத்தூா் நகா் பகுதியே முழு பொதுமுடக்கம் போல் காட்சியளித்தது. பொதுமக்கள் வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக நகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com