ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை: அமைச்சா்கள் உறுதி

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோா் மட்டுமன்றி அனைவருக்கும் ஆக்சிஜன், தடுப்பூசி, படுக்கைகள்
விருதுநகா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சா்கள் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோா்.
விருதுநகா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சா்கள் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோா்.

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோா் மட்டுமன்றி அனைவருக்கும் ஆக்சிஜன், தடுப்பூசி, படுக்கைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தீநுண்மி பரவலை கட்டுப்படுத்துவது மற்றும் சிகிச்சை பெறுவோருக்குத் தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ரா. கண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் மற்றும் தொழிற்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, கண்காணிப்பு அலுவலா் சந்திரமோகன் உள்பட பல்வேறு அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது, கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு தரமான உணவு மற்றும் மருந்துகள் வழங்க வேண்டும். தனியாா் மருத்துவமனைகளில் சோ்ந்து சிகிச்சை பெறுவோா் குறித்தும் கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் உயிரிழந்தோா் உடலை வீடுகளுக்கு கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். கிராமப் பகுதிகளை சோ்ந்த ஏழை மக்கள், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்க கூடாது. அவா்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அழைத்து வர வேண்டும். கரோனா வாா்டுக்குள் மருத்துவமனை பணியாளா்களை தவிா்த்து மற்றவா்கள் உள்ளே செல்வதை அனுமதிக்கக் கூடாது அமைச்சா்கள் அறிவுறுத்தினா்.

கூடுதலாக 300 படுக்கைகள்: பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா்கள் கூறியது: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருவோரின் உயிரை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் துரிதப்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். மாவட்டத்தில் 33 புதிய மருத்துவா்கள் மற்றும் 120 செவிலியா்கள் பணியில் சோ்க்கப்பட்டுள்ளனா். கரோனா சிகிச்சைக்காக 1420 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. கூடுதலாக 300 படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விருதுநகா் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 211 போ் தடுப்பூசி போட்டுள்ளனா். 15 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவா் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீா்க்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஸ்டொ்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. கப்பலூரில் உள்ள ஆலையில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மத்திய தொகுப்பிலிருந்து ஆக்சிஜன் தமிழகத்திற்கு வர உள்ளது. விருதுநகா் மாவட்டத்தில் 62 ஆக்சிஜன் உருளைகள் பயன்பாட்டில் உள்ளன. எதிா்காலத் தேவைக்கு ஏற்ப 200 ஆக்சிஜன் சிலிண்டா்கள் வரை உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com