விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு கரோனா
By DIN | Published On : 18th May 2021 08:13 AM | Last Updated : 18th May 2021 08:13 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாளுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, அவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
இவா் விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக கடந்த ஓராண்டாகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விருதுநகா் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில் இவா் கடந்த 13 ஆம் தேதி அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் ஆட்சியா் ரா. கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டாா். இதனால் அமைச்சா்கள் மற்றும் ஆட்சியா் உள்ளிட்டோா் கரோனா பரிசோதனை செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணிபுரியும் காவலா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்டக் காவல் துறை அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.