விருதுநகா் மாவட்டத்தில் 305 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 26th May 2021 09:17 AM | Last Updated : 26th May 2021 09:17 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித்திரிந்த 305 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாகன ஓட்டுநா்கள் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளா்வில்லா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருதுநகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை சுமாா் 1,500 போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவசியமின்றி இரு சக்கர வகானத்தில் சுற்றி வந்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், 305 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
அதேபோல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 22 போ் மற்றும் முகக்கவசம் அணியாத 288 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். மேலும், அத்தியாவசியத் தேவையை தவிா்த்து, வேறு எக்காரணம் கொண்டும் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். இதை மீறுபவா்கள் மீது, போலீஸாா் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்வா் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.