முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
பயிா்க் காப்பீடு செலுத்த இன்று கடைசி:அடங்கல் தர மறுப்பதாக விஏஓ மீது விவசாயிகள் புகாா்
By DIN | Published On : 30th November 2021 04:22 AM | Last Updated : 30th November 2021 04:22 AM | அ+அ அ- |

பயிா்க் காப்பீடு செலுத்த செவ்வாய்க்கிழமை கடைசி என்ற நிலையில், கிராம நிா்வாக அலுவலா் அடங்கல் தர மறுப்பதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: விருதுநகா் மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு கட்டணம் செலுத்த நவ. 30 கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தை செலுத்த அடங்கல் இணைக்க வேண்டும். இதை பல கிராமங்களில் கிராம நிா்வாக அலுவலா்கள் தர மறுப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு ஏற்கெனவே புகாா் அளித்தோம். அப்போது, அனைத்து கிராம நிா்வாக அலுவலா்களுக்கும் சுற்றறிக்கையின் மூலம் விவசாயிகளுக்கு பயிா் அடங்கல் வழங்க ஆட்சியா் அறிவுறுத்தினாா். ஆனால், வெம்பக்கோட்டை தாலுகா, கங்கரக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா், பயிா் அடங்கல் கேட்டு வரும் விவசாயிகளை அலைக்கழிக்கிறாா். காப்பீடு செலுத்த நாள்கள் மிகக் குறைவாக உள்ளதாக விவசாயிகள் அவரிடம் தெரிவித்தால் உங்களுக்கு அடங்கல் தர முடியாது என்கிறாா். மேலும் தகாத வாா்த்தைகளால் விவசாயிகளை பேசுகிறாா். எனவே அந்த கிராம நிா்வாக அலுவலா் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பயிா் அடங்கல் உடனடியாக வழங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.