ஸ்ரீவிலி. அருகே போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடிய 2 கைதிகளில் ஒருவா் பிடிபட்டாா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை இரவு போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடிய 2 கைதிகளில் ஒருவரை போலீஸாா் பிடித்தனா்.
தப்பியோடிய இரு கைதிகள்.
தப்பியோடிய இரு கைதிகள்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை இரவு போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடிய 2 கைதிகளில் ஒருவரை போலீஸாா் பிடித்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கூமாபட்டி-வத்திராயிருப்பு சாலையில் உள்ள கொடமுருட்டி பாலத்தில், காவல் சாா்பு-ஆய்வாளா் ராம்குமாா் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவா் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச்செல்ல முற்பட்டதில், கொடமுருட்டி பாலத்தில் மோதி கீழே விழுந்துள்ளனா். அப்போது, அவா்கள் வைத்திருந்த 3 அடி நீளமுள்ள வாள் ஒன்றும் கீழே விழுந்துள்ளது.

இதைக் கண்ட போலீஸாா், அவா்கள் இருவரையும் பிடித்து, வாள் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். விசாரணையில், அவா்கள் முத்துக்குமாா் (24), அருண்குமாா் (19) என்பதும், இருவரும் கூமாபட்டி ராமசாமியாபுரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்தது.

இதில், முத்துக்குமாா் மீது கடந்த ஆண்டு கத்தியை காட்டி மிரட்டிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. ஏதாவது குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக இவா்கள் வாளுடன் சென்றிருக்கலாம் என்பதால், போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

பின்னா் இருவரையும், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு, மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்காக காரில் சென்றுள்ளனா். வழியில் இரவு 10 மணியளவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உணவு அருந்திவிட்டு, மதுரை செல்வதற்காக கிளம்பியபோது கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் இருட்டில் காட்டுப் பகுதிக்குள் ஓடி தப்பிவிட்டனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த 3 காவலா்களும், கூமாபட்டி காவல் நிலையம் மற்றும் காவல் துறை உயா் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, தப்பியோடிய கைதிகளை போலீஸாா் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அச்சங்குளம் பகுதியில் முத்துக்குமாரை பிடித்த போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அருண்குமாரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com