அருப்புக்கோட்டை அருகே முயல் வேட்டை: முதியவருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்
By DIN | Published On : 17th October 2021 11:04 PM | Last Updated : 17th October 2021 11:04 PM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை முயல் வேட்டையாட முயன்ற ஒச்சான்
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை முயல் வேட்டையாட முயன்ற முதியவருக்கு வனத்துறையினா் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
விருதுநகா் மண்டல உதவி வனப் பாதுகாவலா் மணிவண்ணனுக்கு அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் முயல் வேட்டை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் வனப் பாதுகாப்புப் படை அலுவலா் செந்தில் ராகவன் தலைமையிலான வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே 57 வயது மதிக்கத்தக்க ஒருவா் முயல் பிடிக்க முயற்சி செய்யும் வகையில் கன்னி கட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத் துறையினா் அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த ஒச்சான் (57) என்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து அவரிடமிருந்து முயல் பிடிக்கப் பயன்படுத்தப்படும் கன்னி மற்றும் இருசக்கர வாகனத்தை வனத் துறை
அதிகாரிகள் பறிமுதல் செய்து வத்திராயிருப்பு வன அலுவலகத்தில் ஒப்படைத்தனா். அங்கு ஒச்சானுக்கு வனச் சரகா் கோவிந்தன் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தாா்.